
தேவதானப்பட்டி அருகே விபத்தில் காதலி இறந்த இடத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
சாலை விபத்தில் காதலி சாவு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவிலை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும், மேக்கிலார்பட்டியை சேர்ந்த வாசி என்பவரின் மகள் ஜெயமாலா (20) என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 6-ந்தேதி இருவரும் மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் குறுக்கே இருந்த வேகத்தடையை கடந்து சென்றபோது, நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஜெயமாலாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந் தேதி ஜெயமாலா பரிதாபமாக இறந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த விபத்து குறித்து ஜெயமாலாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில், ஆனந்தகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் அவர் வெளியே வந்தார். காதலி இறந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை காதலியை விபத்தில் பறிகொடுத்த இடத்திற்கு ஆனந்தகுமார் சென்றார். பின்னர் சாலையோரத்தில் இருந்த மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலியை விபத்தில் பறிகொடுத்த இடத்தில் ஆனந்தகுமார் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








No comments :