எகிப்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறை; 30 பேர் பலி

எகிப்தில் கால்பந்து போட்டியை பார்க்கச் சென்ற ரசிகர்கள் டிக்கெட் இல்லாமலேயே மைதானத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் விரட்டி அடித்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 ரசிகர்கள் பலியானார்கள்.

கால்பந்து போட்டி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் விமானப்படை விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு ‘எகிப்து பிரிமியர் லீக்’ அணிகளுக்கான கால்பந்து போட்டி நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டி ஒன்றில் ஜமாலெக்- ஈ.என்.பி.பி.ஐ ஆகிய அணிகள் மோதின. போட்டியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர்.

நுழைய முயற்சி

இந்த நிலையில் ஜமாலெக் அணியின் ரசிகர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரும் டிக்கெட் வாங்காத நிலையில் போட்டியை காண்பதற்காக உள்ளே நுழைய முயற்சித்தனர்.

மைதானத்தின் நுழைவு கதவுகளை உடைத்துவிட்டு உள்ளே நுழைய முயன்றதால் அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளும், மோதலும் ஏற்பட்டது.

வன்முறை

இதனால் ஆத்திரமடைந்த ஜமாலெக் கால்பந்து ரசிகர்கள் அப்பகுதியில் சாலை போக்குவரத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். மேலும், அங்கே நின்றிருந்த போலீஸ் வாகனம் ஒன்றையும் தீ வைத்து கொளுத்தினர்.

எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் கால்பந்து ரசிகர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை விரட்டினர்.

30 பேர் பலி

இதனால் கால்பந்து ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரின் தாக்குதலுக்கு பயந்து நாலா திசைகளிலும் சிதறி ஓடினர்.

அப்போது ஏராளமானோர் கீழே தவறி விழுந்தனர். அவர்கள் மீது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஏறி மிதித்துக் கொண்டு ஓடினர். இதில் 30 ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியான ரசிகர்களில் பலர் நெரிசலின்போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக பிணங்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களும், சம்பவத்தை நேரடியாக பார்த்த கால்பந்து ரசிகர்களும் தெரிவித்தனர்.

17 ரசிகர்கள் கைது

இந்த சம்பவத்தில் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ரசிகர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஜமாலெக் கால்பந்து ரசிகர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

எகிப்தில் இதேபோல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போர்ட் சயீத் நகர மைதானத்தில் நடந்த கலவரத்தில் 70 ரசிகர்கள் பலியானது நினைவு கூரத்தக்கது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top