குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாய் படேல் (வயது 57). இவரது மகன் சிராக், அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில், மேடிசன் நகரில் என்ஜினீயராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 17 மாத குழந்தை உள்ளது.சுரேஷ் பாய் படேல், தனது பேரக் குழந்தைகயை பார்த்துக்கொள்ளவும், மகனுக்கும், மருமகளுக்கும் உதவுவதற்கும் அமெரிக்கா சென்றிருந்தார்.
இவர் கடந்த 6-ந் தேதி அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரைக் கண்டு சந்தேகித்த ஒருவர், போலீசுக்கு தொலைபேசியில் புகார் செய்தார். உடனே 2 போலீஸ் அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஆங்கில மொழியில் பேசியதால், சுரேஷ் பாய் படேலுக்கு பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’, ‘இந்தியன்’ என்ற வார்த்தைகளை மட்டுமே சொல்லி இருக்கிறார்.
அத்துடன் அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் ஏதேச்சையாக கை விட்டிருக்கிறார். அதைக்கண்ட போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அவர் பாக்கெட்டில் ஏதோ விரும்பத்தகாத பொருளை வைத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அவரை கீழே தள்ளி படுகாயப்படுத்தினர். இதனால் அவர் முடமாகி விட்டார். தற்போது அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆங்கில மொழி தெரியாத ஒரே காரணத்தால் சுரேஷ் பாய் படேல் இந்த நிலைக்கு ஆளாகி உள்ளார். இந்தச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
இந்த சம்பவத்துக்கு இந்திய-அமெரிக்க சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலைக்கு சுரேஷ் பாய் படேலை ஆளாக்கிய போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளன.
இதற்கிடையே மேடிசன் போலீஸ் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரி, விசாரணை முடியும் வரை கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் மேடிசன் போலீஸ் மீது வழக்கு தொடர சிராக் திட்டமிட்டுள்ளார்.
இது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியானதும், மத்திய அரசு உஷார் அடைந்து, இதில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உரிய விசாரணை நடத்தி, அது குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் நேற்று கூறியதாவது:-
இந்த விவகாரத்தில் அட்லாண்டாவில் உள்ள இந்திய துணைத்தூதர், மேடிசன் நகர் போலீசாருடன் தொடர்பில் உள்ளார். தூதரக ரீதியில் தேவையான அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அது பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு அமெரிக்கா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








No comments :