ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக வெளியூரை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகை தந்து ஸ்ரீரங்கம் தொகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் தங்கி இருந்தனர். அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரத்தால் ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் திருவிழா போல் இருந்தது. மேலும் தொகுதியில் ஓட்டல், விடுதிகளில் தங்க இடம் கிடைக்காதவர்கள் திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தங்கி தொகுதிக்கு சென்று வந்து பிரசாரம் செய்தனர். தொகுதி முழுவதும் கிராமங்களில் மது விருந்து, பிரியாணி, விதவிதமான அசைவ சாப்பாடு, சைவ உணவு விருந்தால் மக்கள் திகைத்துப்போனார்கள். மேலும் குத்தாட்டம், கரகாட்டம் என கலகலப்பாக இருந்தது. இவை அனைத்தும் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிந்தது. அரசியல் கட்சியில் உள்ள மதுபிரியர்கள் மது அருந்தி உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபட்டதால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்தது.
திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 232 டாஸ்மாக் கடைகளிலும் மதுபானம் விற்பனை அமோகமாக நடந்தது. குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட 22 கடைகளில் மது விற்பனை இரு மடங்காக இருந்தது. திருச்சி மாவட்டம் முழுவதும் 232 கடைகளில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 11 நாட்களில் மொத்தம் ரூ.35 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும் சுமார் ரூ.5 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த விற்பனை தொகை வழக்கமானதை விட கூடுதலாகும். வாக்குப்பதிவையொட்டி திருச்சி, புதுக்கோட்டை மாவட் டங்களில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








No comments :