சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்

சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு மருத்துவமனையிலேயே வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தி சித்ரவதை

திருவண்ணாமலை டவுன் பே-கோபுரம் பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (வயது 28). இவரது மனைவி லோகேஸ்வரி (26). இவர்கள் இருவரும் சென்னையில் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வினி (4லு) என்ற மகளும், அஸ்வின் (3லு) என்ற மகனும் உள்ளனர்.

இந்த குழந்தைகளை, சென்னையில் வைத்து பராமரிக்க முடியாததால், லோகேஸ்வரி குடியாத்தத்தை அடுத்த கொத்தமாரிகுப்பம் கிராமத்தில் உள்ள தனது தங்கை முத்துலட்சுமியிடம் குழந்தைகளை வளர்க்குமாறு கொடுத்தார்.

குழந்தைகளை முத்துலட்சுமி கொடுமை செய்வதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், விமல்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது மனைவி லோகேஸ்வரியுடன், குடியாத்தம் வந்து பார்த்தபோது, தன் குழந்தைகள் அடையாளம் தெரியாதபடி, உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முத்துலட்சுமியிடம் விசாரித்தபோது, அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.

சிகிச்சை முடிந்து...

பின்னர், குழந்தைகளை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு 9 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று இருவரும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குழந்தைகளின் உடல்நிலை குறித்து அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் சித்தி அத்தியா முனவரா கூறியதாவது:-

சிறுமி அஸ்வினிக்கு கண்கள் பாதிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டதோடு, எதிர்காலத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் அவரது இடது கைவிரலின் எலும்பு முறிந்திருந்தது. அவையும் தற்போது இணைந்து குணமடைந்துவிட்டது.

அதேபோல் அஸ்வின் காலில் வெந்நீர் ஊற்றப்பட்டு இருந்த காயங்கள் குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெற்றோருக்கு வேலை

குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் பெற்றோருக்கு இந்த மருத்துவமனையிலேயே முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கல்விக்கு ஏற்ற வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் குழந்தைகளின் படிப்புக்கு இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து நன்கொடை வசூல் செய்து நிதியுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top