ஆட்டோ சங்கர் கூட்டாளியும், ஆயுள் தண்டனை கைதியுமான ஆட்டோ செல்வராஜூக்கு இன்று (புதன்கிழமை) மதுரையில் திருமணம் நடைபெறுவதால், அவருக்கு 35 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கும்படி பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆட்டோ சங்கர்
சென்னை திருவான்மியூரில், 1980–களில் விபசாரத் தொழில் மற்றும் கள்ளச்சாராய வியாபாரத்தில் கொடிக்கட்டி பறந்தவர் ஆட்டோ சங்கர். இவர், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து விபசார அழகி லலிதா, நண்பர் சுடலை உள்பட 6 பேரை வெவ்வேறு நாட்களில் கொலை செய்தார்.
கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில் சிலவற்றை எரித்து முட்டுக்காடு பகுதியில் வீசியும், சில பிணங்களை வீட்டுக்கு அருகே புதைத்தும் வைத்தார். இதுசம்பந்தமாக பதிவான வழக்கில், ஆட்டோ சங்கர், அவரது தம்பி ஆட்டோ மோகன், மைத்துனர் சிவாஜி, ஆட்டோ செல்வராஜ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஆயுள் கைதி
இவர்கள் மீதான வழக்கு விசாரணையின்போது, ஆட்டோ சங்கர் உள்ளிட்ட பலர் சிறையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களை போலீசார் வடமாநிலத்தில் கைது செய்தனர். இதில், ஆட்டோ மோகன், ஆட்டோ செல்வராஜ் ஆகியோர் மட்டும் பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பின்னர் பிடிப்பட்டனர்.
இதற்கிடையில் ஆட்டோ சங்கர், சிவாஜி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.
ஆட்டோ செல்வராஜ், மோகன் ஆகியோர் பின்னர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இன்று திருமணம்
ஆயுள் தண்டனை கைதி ஆட்டோ செல்வராஜை திருமணம் செய்ய உள்ளதாகவும், எனவே, அவருக்கு 2 மாதம் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் மணப்பெண் கலாராணி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கலாராணி கூறியிருப்பதாவது:–
நான் மதுரையில் உள்ள ஒரு கண் ஆஸ்பத்திரியில் நர்சாக பணி செய்கிறேன். என் தாயாரின் தம்பியும், என்னுடைய தாய்மாமாவுமான செல்வா என்ற செல்வராஜ் ஆயுள் தண்டனை கைதியாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1991–ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். இவருக்கும், எனக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற ஏப்ரல் 8–ந் தேதி (இன்று) மதுரை, ஸ்ரீநிதி ஓட்டலில் திருமணம் நடைபெறுகிறது.
2 மாதம் விடுப்பு
இந்த திருமணத்துக்காக செல்வராஜூக்கு 2 மாதம் விடுப்பு வழங்க வேண்டும் என்று அவரது மைத்துனர் சிறைத்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார். அந்த மனு பரிசீலனையில் உள்ளது.
எனவே, எங்களது திருமணத்துக்காக, மணமகனான என் மாமாவுக்கு 2 மாதம் விடுப்பு வழங்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் பி.புகழேந்தி ஆஜராகி வாதிட்டார்.
இன்ஸ்பெக்டர் உறுதி
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் பிளீடர் விஜயகுமார், ‘மனுதாரருக்கும், ஆயுள் தண்டனை கைதி செல்வராஜூக்கும் ஏப்ரல் 8–ந் தேதி மதுரையில் திருமணம் நடைபெற உள்ளது என்பதை மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி செய்து அறிக்கை அனுப்பியுள்ளார். ஆட்டோ செல்வராஜ் முதலில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், ஒழுக்கம் தொடர்பான நடவடிக்கையின் அடிப்படையில், அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்’ என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி சிவஞானம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மனுதாரருக்கும், ஆயுள் கைதி செல்வராஜூக்கும் மதுரையில் உள்ள ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது என்பதை மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி செய்துள்ளார். இதனடிப்படையில் இந்த மனுவை ஏற்றுக்கொள்கிறேன்.
35 நாட்கள் விடுப்பு
பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர், கைதி செல்வராஜூக்கு ஏப்ரல் 6–ந் தேதி முதல் மே 10–ந் தேதி வரை சாதாரண விடுப்பு வழங்க வேண்டும். செல்வராஜ், மே 10–ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் சிறைக்கு சென்றுவிட வேண்டும். அதே நேரம், கைதிகளுக்கு இதுபோன்ற விடுப்பு வழங்கும்போது, மேற்கொள்ளப்படும் சட்டப்படியான நடவடிக்கையை சிறை நிர்வாகம் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூற்பட்டுள்ளது.








No comments :