சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 1,195 இந்தியர்களின் பட்டியல் வெளியானது விசாரணை நடத்த மத்திய அரசு உறுதி

புதுடெல்லி,
சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 1,195 இந்தியர்களின் பட்டியல் வெளியானது. அவர்களைப் பற்றி விசாரணை நடத்த உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
கருப்பு பணம்வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணம் போட்டு வைத்துள்ள 628 இந்தியர்களின் பட்டியல், கடந்த 2011–ம் ஆண்டு, பிரான்சு நாட்டு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு கிடைத்தது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய பட்டியல்இந்நிலையில், சுவிஸ் நாட்டின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணம் போட்டு வைத்துள்ள மேலும் 1,195 இந்தியர்களின் பெயர் பட்டியல் நேற்று ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியானது. பிரான்சு நாட்டு அரசு வட்டாரங்களில் இருந்து பாரீஸ் பத்திரிகையாளர்கள் அந்த பட்டியலை பெற்றுத்தந்துள்ளனர்.
அந்த பட்டியலில், கடந்த 2006–2007–ம் நிதி ஆண்டில் அவர்களது வங்கி கணக்கில் இருந்த பண விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,195 இந்தியர்களும் வைத்திருந்த மொத்த பணம் ரூ.25 ஆயிரத்து 420 கோடி ஆகும்.
யார் யார்?இந்த பட்டியலில், அரசியல் தலைவர்கள், பெரும் தொழில் அதிபர்கள் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பிரனீத் கவுர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்னு தாண்டன், மறைந்த முன்னாள் மத்திய மந்திரியும், சோனியா காந்தி குடும்பத்தின் விசுவாசியுமான வசந்த் சாத்தேவின் குடும்பத்தினர். முன்னாள் சிவசேனா தலைவரும், தற்போது காங்கிரசில் இருப்பவருமான நாராயண் ரானேவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் மருமகள் சுமிதா தாக்கரே ஆகிய அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தொழில் அதிபர்களில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த நரேஷ் கோயல், எமார் எம்.ஜி.எப். குழுமத்தைச் சேர்ந்த ஷ்ரவன் குப்தா, பிர்லா குழும கிளை, ஷா வாலஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சாப்ரியா குடும்பத்தினர், டாபரின் பர்மன் குடும்பத்தினர், எஸ்கார்ட்ஸ் குழுமத்தின் நந்தா குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அருண் ஜெட்லிகருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் புதிய பட்டியல் வெளியானது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான பெயர்கள், ஏற்கனவே வெளியானதுதான். இருப்பினும், சில புதிய பெயர்களும் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தும்.
பட்டியலில் உள்ள எல்லோருமே சட்டவிரோதமானவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால், சிலர் தங்களது வெளிநாட்டு வர்த்தக பரிவர்த்தனை குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ளனர். வேறு சிலர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆவர்.
இருப்பினும், ஆதாரம் இல்லாவிட்டால், வெறும் பெயர்கள் வேலைக்கு ஆகாது. ஆதாரமும் இருந்தால்தான், வலுவான வழக்காக பதிவு செய்ய முடியும். வெறும் பெயர்கள் மட்டும், கோர்ட்டில் உரியமுறையில் வழக்கு நடத்த உதவாது. உறுதியான ஆதாரமும் இருக்க வேண்டும். அந்த ஆதாரம் நம்பகத்தன்மையாகவும் இருந்தால்தான் கோர்ட்டில் நிற்கும்.
வருமான வரி வழக்குஏற்கனவே பெறப்பட்ட 628 பெயர்கள் கொண்ட பட்டியலில், 60 பேருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. 350 பேர் மீது அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
மீதி பேரின் பெயர் மற்றும் முகவரியை சரிபார்ப்பது கடினமாக உள்ளது. ஆயினும், அப்பணி, மார்ச் 31–ந் தேதிக்குள் முடிவடையும். சட்டத்தை மீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
மத்திய அரசு அறிக்கைமேலும், மத்திய அரசு சார்பில், ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஏற்கனவே வெளியான முதல் பட்டியலில் இருந்த 628 பெயர்களில், 200 பேர் இந்தியாவில் வசிக்காதவர்கள் அல்லது கண்டறிய இயலாதவர்கள் ஆவர். மீதி 428 பேர் நடவடிக்கை எடுக்கத்தக்கவர்கள். அவர்கள் போட்டு வைத்துள்ள மொத்த கருப்பு பணம் ரூ.4 ஆயிரத்து 500 கோடி.
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விசாரணைஇந்த பட்டியலை வெளியிட்டவருடன் வருமான வரித்துறை தொடர்பு கொண்டுள்ளது. கருப்பு பண கணக்குகள் குறித்து அவரிடம் உள்ள தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அவரது பதிலுக்காக காத்திருக்கிறோம்.
புதிய பட்டியலில் உள்ள பல பெயர்கள், ஏற்கனவே கிடைத்த பட்டியலிலும் உள்ளன. அதில் இடம்பெறாத புதிய நபர்கள் மீது சட்டத்துக்கு உட்பட்டவகையில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top