ஜாம்பவான்களை வீழ்த்திய கத்துக்குட்டிகள்

 ஜாம்பவான்களை வீழ்த்திய கத்துக்குட்டிகள்

இந்த உலக கோப்பையை போல அதிர்ச்சி தோல்விகள் வேறு எந்த உலக கோப்பையிலும் நடந்ததில்லை. ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த முன்னாள் சாம்பியன் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 49.3 ஓவர்களில் 191 ரன்னில் சுருண்டது. சவுரவ் கங்குலி (66 ரன்), யுவராஜ்சிங் (47 ரன்) தவிர மற்றவர்கள் சோடை போனார்கள்.

என்றாலும் சிறிய அணி தானே மடக்கி விடலாம் என்ற நினைப்பில் பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு மூன்று இளைஞர்கள் ‘தண்ணி’ காட்டினர். 18 வயதான தமிம் இக்பால் (51 ரன்), 18 வயதான முஷ்பிகுர் ரகிம் (56 ரன்), 19 வயதான ஷகிப் அல்ஹசன் (53 ரன்) ஆகியோரின் துணிச்சலான ஆட்டத்தால் வங்காளதேச அணி 48.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை புரட்டிபோட்டது. அப்போதே இந்தியர்களின் இதயம் சுக்கு நூறாக நொறுங்கிப் போனது.

அடுத்து கிரிக்கெட் பற்றி அதிகம் தெரிந்திருக்காத ஒரு சுண்டக்கா அணியான பெர்முடாவை இந்திய வீரர்கள் துவைத்து எடுத்தனர். ஷேவாக் (114 ரன்), சவுரவ் கங்குலி (89 ரன்), யுவராஜ் (83 ரன்), சச்சின் தெண்டுல்கர் (57 ரன்) உள்ளிட்டோரின் விளாசலால் இந்தியா 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்தது. உலக கோப்பை வரலாற்றில் 400 ரன்களை தொட்ட முதல் அணி என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது.

இதையடுத்து கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இந்திய அணி இலங்கையை சந்தித்தது. இதில் இலங்கை 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்தது. பொறுப்பற்ற முறையில் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் 43.3 ஓவர்களில் 185 ரன்களில் அடங்கிப் போனார்கள். அதிகபட்சமாக கேப்டன் ராகுல் டிராவிட் 60 ரன்கள் எடுத்தார். சச்சின் தெண்டுல்கர், விக்கெட் கீப்பர் டோனி டக்-அவுட் ஆனார்கள். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. 110 கோடி மக்களின் கனவுகளை சுமந்தபடி வெஸ்ட் இண்டீசுக்கு பறந்த இந்திய வீரர்கள் சென்ற வேகத்தில் தாயகத்திற்கு மூட்டையை கட்டினர். ஆத்திரமடைந்த ரசிகர்கள் டோனி உள்ளிட்ட சில வீரர்களின் வீடுகளில் கற்களை வீசி தாக்கினார்கள். ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலிக்கு இதுவே கடைசி உலக கோப்பையாக அமைந்தன.

முன்னதாக இந்திய அணியின் பரம எதிரி பாகிஸ்தானுக்கும் இதே ‘அடி’ விழுந்தது. ‘டி’ பிரிவில் தொடக்க ஆட்டத்தில் 54 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்ற பாகிஸ்தான் அணி அடுத்து, உலக கோப்பையில் முதல் முறையாக அடியெடுத்து வைத்த அயர்லாந்தை சந்தித்தது. ஆனால் அயர்லாந்தும் பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைந்தது தான் வியப்புக்குரிய விஷயம். இன்ஜமாம் உல்-ஹக் தலைமையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் வெறும் 132 ரன்னில் ‘சரண்’ அடைந்தது. இந்த ரன்களை எட்டிப்பிடித்த அயர்லாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பாகிஸ்தானை போட்டியில் இருந்து துரத்தியடித்தது.

ஏற்கனவே ஐ.சி.சி.யின் கெடுபிடியாலும், டிக்கெட் விலை உயர்வாலும் ரசிகர்களின் வருகை மந்தமாகவே இருந்தது. இந்த சூழலில் வருவாயை பெருக்கும் சக்தியை கொண்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஆரம்பத்திலேயே ‘அவுட்’ ஆனதால் பொருளாதார ரீதியாக போட்டியை நடத்திய வெஸ்ட் இண்டீசுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டது

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top