
புதிய தரவரிசைப்படி பேட்டிங்கில் இந்திய ஆட்டக்காரர் விராட் கோலி 4-ஆவது இடத்தில் தொடர்கிறார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவண் 6-ஆவது இடத்திலும், கேப்டன் மகேந்திரசிங் தோனி 8-ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் 330 ரன்கள் அடித்த மற்றோர் இந்திய ஆட்டக்காரரான ரோஹித் சர்மா ஏழு இடங்கள் முன்னேறி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் ஆகியோருடன் 12-ஆவது இடத்தை பங்கிட்டுள்ளார்.
ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2-ஆவது இடத்திலும் உள்ளன. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.1.05 கோடியும், இந்திய அணிக்கு ரூ.45 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும்.
ஸ்டார்க் முதலிடம்: பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவின் மிச்செல் ஸ்டார்க் இரண்டு இடங்கள் முன்னேறி முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சினால் 147 புள்ளிகள் உயர்ந்து, தற்போது 783 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இந்தியாவின் உமேஷ் யாதவ் முதல் முறையாக 20 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளார். முடிவடைந்த உலகக்கோப்பை போட்டித் தொடரில் அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதோடு அரையிறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 16 இடங்கள் முன்னேறி இங்கிலாந்தின் ஜேம்ஸ் டிரெட்வெல், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோருடன் 18-ஆவது இடத்தில் உமேஷ் யாதவ் உள்ளார்.
தொடர்ந்து முதலிடத்தில் டி வில்லியர்ஸ்: ஒருநாள் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மேலும் அவர் 900 புள்ளிகளை கடந்த, இரண்டாவது தென் ஆப்பிரிக்க (ஒட்டுமொத்த அளவில் 11-ஆவது) ஆட்டக்காரர் என்ற பெருமையையும் பெற்றார். முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மாற்றம் எதுவுமில்லை. தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், இலங்கையின் சங்ககாரா, தென் ஆப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா, இந்தியாவின் விராட் கோலி, இலங்கையின் தில்ஷான் ஆகியோர் முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். புதிய தரவரிசைப்படி ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்டில் இருவரும் அதிக இடங்கள் முன்னேறியுள்ளனர்.
19 இடங்கள் முன்னேறி ஸ்மித் 12-ஆவது இடத்திலும், 12 இடங்கள் முன்னேறி கப்டில் 22-ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்த உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றவர்களில் மூன்று இடங்கள் முன்னேறி கிளார்க் 29}ஆவது இடத்திலும், பிரென்டன் டெய்லர் (ஜிம்பாப்வே) 4 இடங்கள் சரிந்து 20-ஆவது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் மிஸ்பா ஓர் இடம் முன்னேறி 12-ஆவது இடத்தில் உள்ளார். இலங்கை ஆட்டக்காரர்களான குமார் சங்ககாரா இரண்டாவது இடத்திலும், ஜெயவர்த்தனே 5 இடங்கள் சரிந்து 34-ஆவது இடத்திலும் உள்ளனர்.
தில்ஷான் முதலிடம்: ஆல்ரவுண்டர்களில் இலங்கை ஆட்டக்காரர் திலகரத்ன தில்ஷான் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். ஆல்ரவுண்டர் பட்டியலில் முதல் பத்து வீரர்களில் புதிய வரவாக தென் ஆப்பிரிக்காவின் டுமினி (9-ஆவது இடம்) இணைந்துள்ளார். பந்துவீச்சில் 30-ஆவது இடமும், பேட்டிங்கில் 44-ஆவது இடமும் வகிக்கும் பாகிஸ்தானின் அப்ரிடி ஆல் ரவுண்டர் பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ளார்.
No comments :