மியாமி ஓபன்; ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி




மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

500-வது வெற்றியை நோக்கி முர்ரே

அமெரிக்காவின் மியாமி நகரில் சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 4-ம் நிலை வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), கொலம்பியாவின் சான்டியாகோ ஜிரால்டோவை சந்தித்தார்.

இதில் ஆன்டி முர்ரே 6-3, 6-4 என்ற நேர்செட்டில் சான்டியாகோவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இது ஆன்டி முர்ரே பெற்ற 499-வது வெற்றியாகும். ஆன்டி முர்ரே இன்னும் ஒரு வெற்றி பெற்றால் தற்போது விளையாடி வரும் வீரர்களில் 500-வது சர்வதேச ஆட்டத்தில் வெற்றி பெற்ற 9-வது வீரர், முதலாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெறுவார். அமெச்சூர் வீரர்களுடன், தொழில்முறை வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட (1968) பிறகு 500-வது வெற்றியை பெறும் 46-வது வீரர் என்ற சிறப்பையும் ஆன்டி முர்ரே எட்டுவார்.

நடால் அதிர்ச்சி தோல்வி

மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ‘அதிக பதற்றத்துடன் ஆடியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது’ என்று ரபெல் நடால் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் சோங்காவையும், பிரான்ஸ் வீரர் அட்ரியன் மனாரினோ 7-6 (7-4), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவையும், செக் குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச் 6-7 (4-7), 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பெர்னார்ட் டொமிச்சையும் தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

செரீனா வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 15 வயதான சக நாட்டு வீராங்கனை கேத்ரின் பெலிச்சை எளிதில் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற செரீனாவுக்கு 42 நிமிடமே தேவைப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை சபின் லிசிக்கி 7-6 (7-4) 7-5 என்ற நேர்செட்டில் செர்பியா வீரர் அனா இவானோவிச்சை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் இத்தாலியின் காமிலா ஜியோர்ஜியை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் சாரா எர்ரானி (இத்தாலி), பிளாவியா பென்னட்டா (இத்தாலி), ஸ்வெட்லானா குனெட்சோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top