
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான டேனியல் வெட்டோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பல்வேறு காயம் காரணமாக வெட்டோரி அணியில் இடம்பெறவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு உடல் தகுதி பெற்ற வெட்டோரி ஆச்சரியம் அளிக்கும் வகையில் உலக கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்தார். 36 வயதான வெட்டோரி உலக கோப்பை போட்டியில் சிறப்பாக பந்து வீசி 15 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
மெல்போர்னில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு முதல்முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியுடன் வெட்டோரி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சொந்த நாடு திரும்பிய வெட்டோரி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஆக்லாந்து விமான நிலையத்தில் வெட்டோரி நிருபர்களிடம் பேசுகையில், ‘உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்காக ஆடியதே எனது கடைசி ஆட்டமாகும். எனது கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பான முறையில் முடிந்து இருக்கிறது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். இருப்பினும் உலக கோப்பை போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் பெருமை அளிக்கிறது, எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
300 விக்கெட்டுகளுக்கு மேல்...
1997–ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 18 வயதில் அறிமுகமான வெட்டோரி 113 டெஸ்ட் போட்டியில் விளையாடி 4,537 ரன்னும், 362 விக்கெட்டும் எடுத்துள்ளார். 295 ஒருநாள் போட்டியில் ஆடி 2,253 ரன்களுடன், 305 விக்கெட்டும், 34 இருபது ஓவர் போட்டியில் ஆடி 205 ரன்னுடன், 38 விக்கெட்டும் பெற்றுள்ளார்.
அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வீரர் என்ற பெருமைக்குரிய வெட்டோரி டெஸ்ட், ஒருநாள் போட்டி ஆகிய இரண்டிலும் 300 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 9–வது வீரர் என்ற சிறப்புக்குரியவர். வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லிக்கு (431 விக்கெட்டுகள்) அடுத்தபடியாக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் என்ற பெருமையும் வெட்டோரிக்கு உண்டு.
No comments :